ஒரு முஸ்லிம் மகத்தான கடமைகளை அறிவார் ..

அல்லாஹ்வின் திருப்பெயரால்.......
ஒரு முஸ்லிம்  மகத்தான கடமைகளை அறிவார் ..

முஸ்லிம்  தனது பிள்ளைகளுடன் என்ற தலைப்பில் தொடர்ச்சி...

அருள்மறை குர்ஆனின்  கம்பீரமான எச்சரிக்கைக்  குரலை  செவியேற்கும் முஸ்லிம்  , குழந்தை  வளர்ப்பு எனும் மகத்தான பொறுப்பை அறிந்து கொள்வார்.

விசுவாசிகளே! நீங்கள் உங்களையும், உங்கள் குடும்பத்தினரையும் நரக  நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். அதனுடைய எரிகட்டை  மனிதர்களும் கற்களுமாகும்.
[அல்குர்ஆன்.. 66.6]

ஒவ்வொருவரும் பொறுப்பாளிகள் என்ற ஹதீஸை போன கட்டுரையில் பார்த்தோம். இஸ்லாம், இந்த முழுமையான பொறுப்பை உலகில் வாழும் அனைவரின் கழுத்திலும் பிணைந்துள்ளது. அதிலிருந்து எவரும் தப்பிவிட முடியாது. இஸ்லாம் கற்றுக் கொடுத்த முறையில் குழந்தைகளை வளர்ப்பதும், அதன் அழகிய நற்பண்புகளை அவர்களிடம் உருவாக்குவதும் பெற்றோர்களின் பொறுப்பாகும். நற்பண்புகளைப்  பூரணமாக்கி, மக்களிடையே அதை உறுதிப்படுத்தவே அண்ணல் நபி [ஸல்] அவர்கள் அனுப்பப்பட்டுள்ளார்கள்.


நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்.. ''நான் நற்பண்புகளை பரிபூரணப்படுத்தவே அனுப்பப்பட்டேன்''.
நூல்.. முவத்தா மாலிக்]

பெற்றோர்கள் தங்களது பிள்ளைகளை அல்லாஹ், அவனது ரஸூல்  [ஸல்] அவர்களுக்குக்  கட்டுப்பட்டவர்களாக வளர்க்க வேண்டும் என்பதற்குப் பின்வரும் நபிமொழி மிகப்பெரிய ஓர் ஆதாரம் என அறிஞர்கள் பலர் உறுதி செய்துள்ளனர்.

நபி [ஸல்] அவர்கள் கூறினார்கள்..  ''உங்களது மக்களுக்கு ஏழு வயதாகும்போது அவர்களை தொழுகைக்கு ஏவுங்கள். பத்து வயதாகியும் அவர்கள் தொழுகையை விட்டால் அவர்களை அடியுங்கள்''.........
நூல்.. ஸூனன் அபூதாவூத்]

ஒருவர் இந்த ஹதீஸை செவியேற்ற பின்னரும் தனது குழந்தைகளுக்கு ஏழு வயதாகியும் அவர்களைத் தொழுகைக்கு ஏவவில்லையானால், பத்து வயதாகியும் தொழாமலிருக்கும் பிள்ளைகளை அடிக்கவில்லையானால் அவரது இல்லம் அல்லாஹ்வின் வரம்புகளை மீறிய குறைபாடுகளுடைய இல்லமாகும். இதற்காக பெற்றோர் இருவரும் அல்லாஹ்வின் முன்னிலையில் குற்றவாளியாக நிற்பார்கள்.

சிறந்த இல்லம் ஒரு நற்பண்புள்ள தாயின் மடியைப் போன்றதாகும். அதில்தான் பிள்ளைகள் வளரத் துவங்குகிறார்கள். அது குழந்தைகள் நற்பண்புகளுடன் மலர்வதற்கான முதல் கட்டமாகும். அவர்களது ஆசைகளும், ஆர்வங்களும், பண்புகளும் உருப்பெறும் மையமாகும். எனவே இக்காலகட்டத்தில் அப்பிஞ்சு இதயங்களைப்  பண்படுத்துவதில்  பெற்றோரின் பங்கு மகத்தானது. அவர்களது உடல்  ஆரோக்கியத்தைப்  பேணுவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் உடல், அறிவு, ஆன்மா என அனைத்தும் பூரணத்துவம் பெற்றுத் திகழ  பெற்றோர்கள் பாடுபட வேண்டும்.
இன்ஷாஅல்லாஹ் முஸ்லிம்  தனது பிள்ளைகளுடன் என்ற தொடர்ச்சி இன்னும் நிறைய அறிந்துகொள்ள வேண்டிய விடயங்கள் இருக்கிறது.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்.     

கருத்துகள்