முஸ்லிம் தனது நஃப்ஸூடன்


 அல்லாஹ்வின் திருப்பெயரால்...

முஸ்லிம்கள் மனிதர்களில் சிறந்தவர்களாகத் திகழ வேண்டுமென இஸ்லாம் விரும்புகிறது. தங்களது நடை, உடை, பாவனையில், கொடுக்கல், வாங்கல் மற்றும் ஏனைய செயல்களில் தனித்தன்மைமிக்க அழகிய வழிகாட்டிகளாகத் திகழ வேண்டும். அப்போதுதான் மனிதர்களுக்கான தூதுத்துவத்தை சுமந்துகொள்வதற்கான சக்தியை முஸ்லிம்கள் பெற்றுக்கொள்ள முடியும்.

இப்னு ஹன்ளலிய்யா  [ரலி] அவர்கள் அறிவிக்கிறார்கள்.. நபி [ஸல்] அவர்கள் ஒருமுறை பிரயாணத்திலிருந்து தங்களது தோழர்களுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது கூறினார்கள்..  ''நீங்கள் உங்கள் சகோதரர்களை சந்திக்கச் செல்கிறீர்கள். உங்களது வாகனத்தின் சேணங்களை  சரி செய்து , ஆடைகளை அழகுபடுத்திக் கொள்ளுங்கள். அப்போதுதான் நீங்கள் மனிதர்களில் தனித்தன்மை கொண்டவர்களாக காட்சியளிக்க முடியும். நிச்சயமாக அசிங்கமானத்தையும் அருவறுப்பானதையும் நேசிப்பதில்லை.
ஸூனன் அபூதாவூத்]


இங்கு நபி [ஸல்] அவர்கள் பரிதாபத் தோற்றம், கிழிந்த ஆடைகள் போன்றவற்றைக் குறிப்பிடுகிறார்கள். இத்தகைய நிலையை இஸ்லாம் வெறுக்கிறது.

உண்மை முஸ்லிம்  இவ்வுலகின் மாபெரும் கடமைகளைச்  சுமக்கும் நிலையிலும் தன்னை மறந்துவிடமாட்டார். ஏனெனில் ஒரு முஸ்லிமின் வெளிரங்கம் அவரது உள்ரங்கத்திலிருந்து மாறுபட்டிருக்கக் கூடாது.

உண்மை முஸ்லிம்  தனது உடல், அறிவு ஆன்மாவுக்கு மத்தியில் சமத்துவத்தைப்  பேண  வேண்டும். ஒவ்வொன்றுக்கும் அதற்குரிய உரிமையைக் கொடுக்க வேண்டும். ஒன்றைவிட மற்றொன்றை உயர்த்தி விடக்கூடாது. இதுபற்றி நடுநிலையை வலியுறுத்தி நபி [ஸல்] அவர்களின் பொன்மொழியைக் காண்போம்..

அப்துல்லாஹ் இப்னு அம்ரு [ரலி] அவர்கள் கூறுகிறார்கள்.. நபி [ஸல்] அவர்கள் எனது அளவுக்கதிகமான வணக்கங்களைப்பற்றி அறிந்து, என்னிடம் ''நீர் பகல் முழுவதும் நோன்பு நோற்று, இரவு முழுவதும் நின்று வணங்குவதாக நான் கேள்விப்பட்டேன்''? என்று கேட்டார்கள். நான்  ''ஆம் இறைத்தூதரே ! என்றேன். நபி [ஸல்] அவர்கள்  ''அவ்வாறு செய்யாதீர்கள். நோன்பு வையுங்கள்,, நோன்பின்றியும் இருங்கள். தொழவும் செய்யுங்கள்,, தூங்கவும் செய்யுங்கள். நிச்சயமாக உங்கள் உடலுக்கும், உங்கள் இரு கண்களுக்கும், உங்கள் மனைவிக்கும், உங்களை சந்திக்க வருபவர்களுக்கும் நீங்கள் செலுத்தவேண்டிய கடமைகள் உள்ளன'' என்று கூறினார்கள்.
நூல் .. ஸஹீஹுல் புகாரி]

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.
இன்ஷாஅல்லாஹ் அடுத்த தலைப்பு    '' ஒரு முஸ்லிம்  உண்பதிலும், குடிப்பதிலும்  நடுநிலையானவர்! 

    

கருத்துகள்